Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

14 வயது மகாஜனக் கல்லூரி பெண்கள் அணி தேசியமட்டத்தில் இரண்டாமிடம்

11th February, 2026

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் தேசியமட்டத்தில் 14 வயதுப் பெண்கள் உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் சம்போஷா வெற்றிக்கிண்ணத்திற்காக நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
 
கொழும்பு குதிரைப்பந்தைய திடல் விளையாட்டு மைதானத்தில் இன்று (11.02.2026) வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் யா/யூனியன் கல்லூரியுடன் மோதிய மகாஜனக் கல்லூரி 1:1 என்ற கோல்கள் கணக்கில் ஆட்டநேரமுடிவில் போட்டி சமனிலையானது/
 
போட்டி ஆரம்பமாகி இடைவேளைக்கு முன்னர் மகாஜனா ஒரு கோலை செலுத்தி முன்னிலைபெற்றதை. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் விடாமுயற்சியுடன் மோதின. தொடர்ந்து யூனியன் ஒரு கோலை பெற்று போட்டியை சமனிலைப்படுத்தியது.
 
ஆட்டம் 1:1 என சமனிலையில் முடிவடைய வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சமனிலைதவிர்ப்பு உதையில் யூனியன் கல்லூரி 3:2 என வெற்றிபெற்று சாம்பியனானது. மகாஜனக் கல்லூரி போராடி இரண்டாமிடத்தை பெற்றது.
 
முதன்முதலில் தேசியமட்ட உதைபந்தாட்டத்தில் சாம்பியனான யூனியன் கல்லூரிக்கு மகாஜனக் கல்லூரி சமூகம் சார்பாக இனிய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
 
மகாஜனக் கல்லூரி இவ்வருடம் தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சால் நடாத்தப்பட்ட போட்டியில் 17,20 வயதுப்பெண்கள் அணிகள் இரண்டும் சாம்பியனாகியமையோடு, இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய 16 வயதுப் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியிலும் சாம்பியனாகியது.
 
தொடர்ந்து தேசியமட்டத்தில் மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகளை சாதிக்கவைக்கும் பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார் (சாந்தன்) அவர்களுக்கு பாராட்டுக்கள்.