வீரர்களின் போர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று சமநிலையில் முடிவுற்றது
8th September, 2024
வீரர்களின் போர் என வருணிக்கப்படும் மகாஜனா - ஸ்கந்தா மோதும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக, பார்வையாளருக்கு பெரும் விருந்தாக அமைந்து சமநிலையில் நிறைவுபெற்றது.
இரண்டாவது இனிங்ஸில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மகாஜனா, 6 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டநேரம் நிறைவுபெற வெற்றி - தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது 22 ஆவது வீரர்களின் போர் போட்டி.
நேற்று நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மகாஜனா அணித்தலைவர் களத்தடுப்பை தேர்வுசெய்ய ஸ்கந்தா முதலில் துடுப்பெடுத்தாடியது. முதலாவது இனிங்ஸில் ஸ்கந்தா அனைத்து இலக்குகளையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மகாஜனா அனைத்து இலக்குகளையும் இழந்து 162 ஓட்டங்களைப்பெற்றது.
34 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா 9 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை நிறுத்தி, இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட மகாஜனாவை அழைத்தது. மகாஜனாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்து, போட்டியை விறுவிறுப்பாக்கினார்கள். எனினும் அவர்களது ஆட்டமிழப்புக்களைத் தொடர்ந்து போட்டி சீரான வேகத்தில் நகர்ந்து, பின்னர் மகாஜனா வெற்றியை நோக்கி துடுப்பாட்டத்தை வேகமாக்கியது. எனினும் விக்கெட்டுக்களும் சீரான வேகத்தில் வீழ்த்தப்படவும் ஆட்டநேரம் நிறைவுபெறவும் பார்வையாளருக்கு நல்ல விருந்தோடு போட்டி வெற்றி - தோல்வி இன்றி சமநிலையானது.
ஆட்டநாயகனாக பந்துவீச்சில் முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி, துடுப்பாட்டத்தில் முதலாவது இனிங்ஸில் 19 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 15 ஓட்டங்களையும் பெற்று சகலதுறைகளிலும் பிரகாசித்த மகாஜனக் கல்லூரியின் சகலதுறை வீரன் உ.ஜோவெல் றொசான் தெரிவானார். இவர் சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை ஆட்டகாரர் ஆகியவற்றுக்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.
சிறந்த துடுப்பாட்ட வீரனாக முதலாவது இனிங்ஸில் 39 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 42 ஓட்டங்களையும் பெற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் கே.டிலக்சனும் சிறந்த களத்தடுப்பாளராக அதே கல்லூரியின் எஸ்.கேதுசனும் தெரிவானார்கள்.