11th May, 2024
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 12 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி கொழும்பு குதிரைப் பந்தைய விளையாட்டுத்திடலில் 11-05-2024 இன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருணாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனா 2:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
முதலாவது பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்த மகாஜனா, இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் ஒரு கோலைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது. யாழினி ஒரு கோலையும் கேதாரணி ஒரு கோலையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். இந்த வெற்றிக்காக உழைத்த வீராங்கனைகளுக்கும் பயிற்றுநர் சாந்தகுமார் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
ஒரு தசாப்த காலமாக தன்னை அர்ப்பணித்து மகாஜன மாதாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அதிபர் திரு. ம. மணிசேகரன் அவர்கள் ஓய்வுபெறும் இறுதித்தருணத்தில் கிடைத்த இந்த வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதிபர் அவர்களின் சேவைக்கு கிடைத்த உன்னதமான கௌரவமாக இவ்வெற்றி அமைகின்றது.




