வீரர்களின் போர் சமநிலையில் நிறைவடைந்தது.
27th April, 2025
வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 23ஆவது வீரர்களின் போர் கிரிக்கெட் தொடர் சமநிலையில் நிறைவடைந்தது.
இரண்டு நாட்களை கொண்ட குறித்த கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமையுப் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் ஆகிய தினங்களில் யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் முதலாவது இனிக்ஸில், முதலில் துடுப்பெடுத்தாடிய சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 71.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பில் அதிகபட்சமாக எஸ்.தர்மிலன் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சார்பில் அதிகபட்சமாக யு.யோவல் றொசான் 3 இலக்குகளையும், யு.தரணிகன், யு.துளசிகன் மற்றும் கே.கௌதமன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 86.1 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மகாஜனக் கல்லூரி சார்பில் அதிகபட்சமாக யு.யோவல் றொசான் 84 ஓட்டங்களையும், றியாஸ் முகமட் றியா 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பில் அதிகபட்சமாக மகாலிங்கம் பிரணவன் மற்றும் சிறீகாந்தன் கிரிஷகேசன் ஆகியோர் தலா 4 இலக்குகளையும், சிவானந்தன் வசீகரன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டா இனிக்ஸில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 4 இலக்குகளை இழந்து 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வேளையில் ஆட்டம் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் 23ஆவது வீரர்களின் போர் சமநிலையில் நிறைவடைந்தது.
தொடரின் ஆட்டநாயகனாகவும் சகலதுறை ஆட்ட வீரனாகவும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி வீரர் யு.யோவல் றொசான் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதயக் கல்லூரி வீரர் எஸ்.தர்மிலனும், சிறந்த பந்து வீச்சாளராக ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர் எம்.பிரணவனும் தெரிவுசெய்யப்பட்டனர்.