Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

சமூக விடுதலைக்காக உழைத்த பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை: மகாஜனக் கல்லூரியின் மாபெரும் வரலாறு!

24th June, 2026

சமூக விடுதலைக்காக உழைத்த பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை: மகாஜனக் கல்லூரியின் மாபெரும் வரலாறு! - க. வசந்தரூபன்

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நிறுவுநருமான பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளையின் 97ஆவது நினைவு நாள் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஜூன் 24 ஆம் திகதி மகாஜனக் கல்லூரியில் நிறுவுநர் நினைவுதினமும் பரிசளிப்பு விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழமை. இதே நன்னாளில்தான். 1929ஆம் ஆண்டு பாவலர் துரையப்பாபிள்ளை இயற்கை எய்தினார்.
 
பிறப்பும் கல்விப் பின்னணியும்:
 
பிறப்பும் கல்விப் பின்னணியும் பாவலர் துரையப்பாபிள்ளை தெல்லிப்பழை கச்சேரி முதலியார் அருளம்பலத்துக்கும் தங்கம்மாவுக்கும் 1872ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12 ஆம் திகதி தவப்புதல்வனாக அவதரித்தார். இயல்பாகவே புலமைத்துவப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் உதித்த இவருக்குத் தெல்லிப்பழை பிரதேசத்தின் கல்விச்சுழலும் கைகொடுத்தது. 'கல்லாமை பாதி குலவித்தை' என்பதற்கு இணங்க கல்விமரபு மிக்க குடும்பத்தில் பிறந்த இவருக்கு இயல்பாகவே அறிவுத்திறன் மிளிர்ந்ததில் வியப்பில்லை.
 
அவர் தனது ஆரம்பக்கல்வியைப் பெறுவதற்காக 1880 இல் தெல்லிப்பழை ஆங்கில வித்தியாசாலையில் இணைந்தார். பின்னர் மேற்படிப்புக்காக 1888 இல் வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை செமினரிக்குச் சென்றார். 1890 இல் கேம்பிரிட்ஜ் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் சித்தியடைந்து அரசாங்க சேவையில் இணைந்தார்.
 
தேடலும் ஆசிரியர் பணியும்:
 
அரசாங்கப் பணியில் சேர்ந்தபோதிலும், மக்கள் பணியே பெரிதெனக் கருதி 1892 இல் அப்பணி யைத் துறந்தார். பின்னர் பாணந்துறை தூய யோவான் (St. John's) கல்லூரியில் ஆசிரியராகப் பதவியேற்றார். இக்காலப்பகுதியில் அவர் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை நெருக்கமாக அறிந்துகொண்டார். அதன் பின்னர், 1895 இல் வட இந்தியா நோக்கிப் பயணித்து, பம்பாய் மாநிலத்தின் கோலாப்பூர் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக் காலகட்டத்தில் இந்தியாவில் தீவிரமாக நடந்த விடுதலை இயக்கப் போராட்டங்கள் இவரைக் கவர்ந்தன.
 
1898 இல் பம்பாயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து, தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கை திரும்பியவர். மீண்டும் தெல்லிப்பழை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். 1899 இல் ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். 1900 ஆம் ஆண்டில் அவர் கற்பித்த பாடசாலை அமெரிக்க மிஷனரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, தெல்லிப்பழைச் சந்திக்கு அருகில் நிறுவப்பட்ட போது, அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றார்.
 
மகாஜனக் கல்லூரியின் தோற்றம் (1910)
 
1910 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 14ஆம் திகதி தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஒரே பரபரப்பு நிலவியது. மிஷனரிமார்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஆங்கிலக் கல்வியை. எமது சொந்தச் சைவத் தமிழ் சூழலுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற தீரா வான்புகழ் நோக்கு பாவலரிடம் இருந்தது. அன்றைய தினமே அவர் அமெரிக்க மிஷன் பாடசாலையுடனான தொடர்பை முறித்து, தனது தலைமை ஆசிரியர் பதவியைத் துறந்தார்.
 
அன்றே தனது சொந்த இல்லத்தில் 'மகாஜன உயர்நிலைப் பாடசாலை' தொடங்குவதற்குக் கால்கோள் விழா எடுத்தார். பாவலரின் இந்த உன்னத நோக்குக்குத் துணையாக ஆசிரியர்களான நா சங்கரப்பிள்ளை. க.இலங்கைநாயகம் ஆகியோரும் அமெரிக்க மிஷனில் இருந்து விலகி வந்து இவருடன் இணைந்துகொண்டனர். மாணவர்களும் மிஷன் பாடசாலையை விட்டு வெளியேறி. பாவலரின் புதிய பாடசாலையில் சேர்ந்தனர்.
 
மிஷனரிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியில், மகாஜனப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கப் பாவலர் வழிவகை செய்தார். 1916 இல் இம்மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டு, மிகச் சிறந்த முடிவுகளையும் பெற்றனர். பாவலரின் மறைவுக்குப் பின்னர். அவரது சகலனும் கவிஞருமான சின்னப்பா 16 ஆண்டுகள் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து 'மகாஜனச் சிற்பி' என அழைக்கப்படும் தெது.ஜெயரத்தினம் 25 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றி, கல்லூரியின் பொற்காலத்தை உருவாக்கினார். ஏறத்தாழ 70 ஆண்டுகள் பாவலரின் குடும்பத்தினரே இப்பாடசாலையைச் சீரிய முறையில் வழிநடத்தியுள்ளனர்.
 
சமூகச் சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையும்:
 
ஆங்கிலேயர் காலத்தில் மேலைநாட்டுக் கல்விக் கொள்கைகளால் சைவத் தமிழ் மாணவர்கள் தங்களின் மத, கலாசாரப் பண்பாடுகளை இழந்து வந்தனர். மகாஜனக் கல்லூரியின் தோற்றத்தின் ஊடாகத் தமிழ் மாணவர்கள் ஒரு சைவச் சூழலில் தரமான ஆங்கில உயர் கல்வியைப் பெறும் பெரும் வாய்ப்பு ஏற்பட்டது. 'நாவலர் பெருமானின் நீதி வழியைத் தொடர்ந்தவர்கள் மிகமிகச் சிலர். அந்தச் சிலரில் ஒருவராகச் சிரேஷ்டராய் விளங்கியவர் துரையப்பாபிள்ளை அவர்கள். இவருக்குச் சைவ உலகம் செய்யவேண்டிய நன்றிக்கடன் மிகப் பெரியது.-என்று பாவலரின் பணியைச் சிலாகிக்கிறார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (பாவலர் நூற்றாண்டு விழா மலரின் ஆசியுரையிலிருந்து), பாடசாலைக் கல்விக்கு அப்பாலும் கல்வி முறைமை விரிவடைய வேண்டும் எனச் சிந்தித்த பாவலர், இலங்கைக்குத் தனியானதொரு பல்கலைக்கழகம்' தேவை என்ற கருத்தை முதன் முதலில் முன்வைத்த முன்னோடியாவார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அன்றே வலியுறுத்தியவர். கல்வி, தொழில், பண்பாடு, சுதேசியம். அரசியல் ஆகியவற்றைத் தனது கவிதைகளின் பாடுபொருளாகக் கொண்டிருந்தார். சாதிப்பிரச் சினை. சீதனக் கொடுமை. மது ஒழிப்பு போன்ற சமூக அவலங்களுக்கு எதிராகத் தனது பேனா முனையைத் திருப்பியவர். ஒரு சமூக நிறுவனமாக நின்று செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைத் தன் தனிமனித உழைப்பால் சாதித்துக் காட்டினார்.
 
சமூக நோக்கோடு, சாதாரண பொதுமக்களின் (மகாஜனங்களின்) மேம்பாட்டிற்காகப் பாவலர் விதைத்த கல்வி விதை. இன்று தெல்லிப்பழை மண்ணில் மாபெரும் விருட்சமாகப் படர்ந்துள்ளது. இன்று இலங்கையிலேயே மிக முக்கியமான அடையாளப் பாடசாலைகளுள் ஒன்றாக மகாஜனக் கல்லூரி திகழ்கிறது.
 
கல்வி, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில் அது தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. பாவலர் துரையப்பா பிள்ளையின் 97ஆவது நினைவுநாளான இன்று, அவரின் அரும்பெரும் சமூகப் பணிகளை நன்றியோடு நினைவுகூர்வதுடன், கல்லூ ரியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மகாஜனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என உறுதியேற்போம்.!...